உன் கருவறையின் கதகதப்பில் உயிர் தரித்தேன்
முலைப்பால் வடிகட்டிய உன் உதிரமே
என் முதல் உணவு
- என் தாய் நீ
என்னோடு நகைத்து அழுது சிணுங்கி விளையாடிய
- என் தங்கை நீ
என் பதின் பருவ பட்டாம்பூச்சிகளால்
- என் தேவதை நீ
என்னை ஆண் என என் கடன் யாதென
உணர்த்திய
- என் தோழி நீ
மனபந்தலில் உன் கனவோடு
என் கனவையும் சேர்த்து சுமந்த
- என் மனைவி நீ
என்னவளின் கருவறையில் உயிர் தரித்த
- என் அங்கம் நீ
என் மீசை வழியே என் கர்வம் ஒட்டிக்கொண்ட போது
என்னுள் இருந்த
நான் மறந்த
என் மழலையை மீட்டெடுத்த
- என் உயிர் நீ
முதுமை சருகாக
மூன்று கால் ஊணும் போதும்
என்னை மடி மீது சாய்த்து கொள்ளும்
மீண்டும்
- என் தாயே நீ
பூமி பந்தின் சுழற்சியில்
உயிர்க்கொள்ளும் அனைத்துமே
[உன்]
பெண்பால் கொண்டே உயிர் தரித்தது
அவனின்றி வேண்டுமெனில் ஓர் அணுவும் அசைவின்றி போகும்
அவளின்றி ஓர் பொருளும் உயிர்க்கொள்ளாது
பேதை பெதும்பை
மங்கை மடந்தை
அரிவை தெரிவை
பேரிளம்பெண்
என அனைவருக்கும்
உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள் ....
No comments:
Post a Comment